top of page
Search
  • Writer's pictureArun CJ - CJ Holistic Health

தியான சிகிச்சை வகுப்புகள்

Updated: Jul 31, 2022

மனம் தான் மனிதனின் அடையாளம். மனதின் இயக்கம் தான் மனிதனின் இயக்கம். கவனம் என்பது மனதின் கருவி. கவனத்தைக்கொண்டே மனம் இவ்வுலகில் செயல்படுகிறது. தேவையானவற்றின் மீது கவனத்தை செலுத்துவதும், தேவையற்றவற்றிலிருந்து கவனத்தை விலக்குவதும் ஒரு ஆரோக்கியமான மனம் செய்ய வேண்டிய செயலாகும். ஒரு வாகனம், அந்த வாகன ஓட்டியின் கட்டுப்பாட்டில் இல்லாதபோது என்ன ஆகும்? விபத்து நேரும். அதேபோலத்தான் ஒரு மனிதனுக்கும். அவனது மனதின் கட்டுப்பாட்டில் தான் அவனது வாழ்க்கை அமைய வேண்டுமே தவிர, பல்வேறு பொருள்களோ, தன்மைகளோ அவனது மனதை ஆளுமை செலுத்தி, அவைகள் அவனது வாழ்வின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ளக்கூடாது.


ஒரு மனிதனின் மனம் முழுமையான ஆளுமைத்திறனோடு இல்லாமல் இருப்பதற்கு காரணம், நமது 'கவனத்தில் நிலவும் ஒழுங்கற்ற தன்மைகள்' அல்லது 'கவனச்சிதறல்கள்' தான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும் மனிதனுடைய மனதின் தன்மைகள் தான் அவனுக்குள் இருக்கும் பஞ்சபூத சக்திகளின் இயக்கங்களை ஒழுங்குபடுத்தி, உடல் உறுப்புகளின் சக்திநிலைகளை உறுதி செய்கிறது. உடலின் பஞ்சபூத சக்தி நிலைகள் சரியாக இருந்தால் தான் ஜீரண சக்தி, நோய் எதிர்ப்பு சக்தி உட்பட உடலின் அனைத்து பராமரிப்பு அம்சங்களும் சரியான தன்மையில் இருக்கும். ஆனால் மனம் 'கவனச்சிதறல்களால்' தனது ஆளுமைத்திறனை இழக்கும் போது, பஞ்சபூத சக்திகளிலும் ஒரு சமநிலையற்ற தன்மை உருவாகி, உடலில் நிச்சயமாக ஒரு நோய் உண்டாகும். நமது கவனத்தில் சமநிலையை ஏற்படுத்தி, மனதின் ஆளுமையை மீட்டெடுப்பதே அதுபோன்ற நோய்களுக்கு மருந்து.


இன்றைக்கு மனிதர்களுக்கு ஏற்படும் பெரும்பாலான நோய்களுக்கு அவர்களின் மனதின் கவனச்சிதறல்களும், சமநிலையற்ற தன்மைகளுமே மூலகாரணமாக இருக்கின்றது. ஆகவே, நமது கவனச்சிதறல்களை போக்கி, அதனை சமநிலைப்படுத்தி, மனதின் ஆற்றல்களை நிலைப்படுத்த உதவக்கூடிய ஒரு வழிமுறை நமக்கு தேவை. அவ்வழிமுறையை நாம் தியானம் என்று சொல்கின்றோம். தியானத்தை நோய்களை நீக்க பயன்படுத்துவதால் அதனை தியான சிகிச்சை என்றும் அழைத்துக் கொள்ளலாம். நிச்சயமாக தியானம் பல நோய்களுக்கான நிவாரணங்களை தன்னகத்தே கொண்டுள்ளதாகவே இருக்கின்றது. நமது உள்சூழலில், அதாவது நமது மனதில் மற்றும் சக்தி ஓட்டங்களில், தேவையான மாற்றங்களை, சரியான தன்மையில், அதுவும் நமக்கு நாமே நிகழ்த்திக் கொள்ள, தியானம் ஒரு அற்புத வழியாக இருக்க முடியும்.


அடிப்படையில் நமக்குள்ளே ஏற்படும் உணர்வுகளான பசி, தாகம், சோர்வு, உறக்கம், கழிவு நீக்கம் ஆகியவைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும். நமது குடும்பம், உறவுகள், நமது தொழில், வாழ்க்கை வசதிகள், நமது நல்ல விருப்பங்கள் விருப்பங்கள் என நாம் கவனம் செலுத்த வேண்டிய தேவைகள் எத்தனையோ இருக்கின்றன. சினிமா உள்ளிட்ட ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள், விளம்பரங்கள், பொருள் சார்ந்த நமது மோகங்கள், மனதில் சலனத்தை, சபலத்தை ஏற்படுத்தும் காட்சிகள், நிகழ்வுகள், செய்திகள் என இவைகளும் ஒருபுறம் நமது கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கின்றன. ஆன்மீகம், இறைத்தேடல், விழிப்புணர்வு, ஞானமடைதல் என வாழ்வின் மிக முக்கிய அம்சங்கள் இன்னொரு புறம் இருக்கின்றன. இது போன்ற வாழ்வியல் அம்சங்களிலெல்லாம் நாம் நமது கவன மேலாண்மைகளை 'சரியான தன்மைகளில்' செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் இவற்றில் தேவையில்லாத எத்தனையோ அம்சங்கள் நமது கவனத்தை அவைகள் வசம் ஈர்த்து வைத்துள்ளன. தேவையான எத்தனையோ அம்சங்கள் நமது கவனத்திற்காக காத்துக்கிடக்கின்றன. இந்த கவன சமநிலை மாறுபாடுகளை நாம் சரிசெய்தால் மட்டுமே, நமது அன்றாட வாழ்வில் நிறைவும் அமைதியும் இருக்கும்.


நம் வாழ்வில் துன்பங்களும் சுகவீனங்களும் இருக்கிறது என்றாலே, வீணான வாழ்வியல் அம்சங்களில் நமது கவனம் சிக்கியிருக்கிறது, நமது மனதின் மீதான கட்டுப்பாடுகளை அவைகள் எடுத்துக்கொண்டிருக்கின்றன என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற நிலைகளில் தான் பல அடிமைத்தனங்கள் நமக்குள் உருவாகி, ஒரு சார்பு நிலையில் நமது வாழ்வு அமைந்துவிடுகிறது. இது ஒரு அடிமை வாழ்வு. இதுபோன்ற ஒரு சார்புச்சங்கிலியிலிருந்து நம்மை நாமே விடுதலை செய்துகொண்டு சுய சுதந்திரத்தை அடைய வேண்டும். இதுதான் ஒவ்வொரு தனி மனிதனுக்குமான ஒரு உளவியல் தேவையாகும்.


இத்தேவையை ஒரு சிறிதளவேனும் நிறைவு செய்வதற்காகவே, பல முக்கிய ஆன்மீக வழிமுறைகளை, செயல்முறைகளை தொகுத்து 'தியான சிகிச்சை' என்ற ஒரு பத்து நாட்கள் வகுப்பை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றோம். இதிலே, விபஸ்ஸனா தியான முறையின் புரிதல்களும், பயிற்சிகளும், முடிவிலித்தத்துவம், கழிவு நீக்க தத்துவம் போன்ற இயற்கை வாழ்வியல் தத்துவங்களும், அக்குபங்சர் மருத்துவம் சார்ந்த வாழ்வியல் குறிப்புகளும் தேவைக்கேற்ப கற்பிக்கப்படுகின்றன. நமது மனதின் இரட்டை செயல்பாட்டு முறைகள், கவனம் செலுத்தும் திறனை மேம்படுத்திக்கொள்ளுதல், மனதின் அடுக்குகளில் உள்ள தேவையற்ற பதிவுகளை பலமிழக்கச்செய்யும் வழிமுறைகள், உடல் உறுதியையும், மனஉறுதியையும் அதிகரிக்க உதவும் ஒரு முக்கிய பயிற்சி, எதுவுமே இங்கே நிரந்தரமில்லை, அனைத்தும் மாறும் என்பதை உணர்த்தும் நிலையின்மை விதியைப் பற்றிய புரிதல்கள், மனதில் சமநிலைத்தன்மையை பராமரித்துக்கொள்ள வேண்டிய அவசியங்கள் மற்றும் வழிமுறைகள், இன்னும் மன அமைதிக்கான வாழ்வியல் நெறிகள் மற்றும் கதைகள் என பல அம்சங்கள் இந்த வகுப்பின் அங்கங்களாக இருக்கின்றன. ஒருவரின் வாழ்வின் ஏற்றங்களுக்கும், நோய் நிவாரணங்களுக்கும், மனத்தெளிவிற்கும் இந்த பத்து நாட்கள் வகுப்பு ஒரு சிறிய மற்றும் முக்கிய பங்கை ஆற்ற முடியும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.


ஒவ்வொரு மாதமும், பத்து நாட்கள், இணைய வழியில், ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளியில் இவ்வகுப்புகள் நடைபெறும். முன்னரே பதிவு செய்யப்பட்ட தொகுப்பாக அல்லாமல், என் மூலம், நேரடி உரையாடல் கற்பித்தல்களாக, தமிழ் மொழியில் இவ்வகுப்புகள் அமையும். விருப்பமுள்ளவர்கள் இதில் இணைந்து கொள்ளலாம். இறைவன் அருளால் அனைத்தும் அனைவருக்கும் நன்மையாக அமையட்டும்.


குறிப்பு:

வகுப்புகளில் கலந்து கொள்ள 8939294031 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்





236 views
bottom of page