Arun CJ - CJ Holistic Health
நோய் தீர்க்கும் இரவுப் பிரார்த்தனை
எந்த சக்தி அகில உலகங்களையெல்லாம் படைத்து பராமரித்து பாதுகாத்து வருகின்றதோ, அந்த மகா சக்தியை இப்போது நான் நினைவு கூறுகின்றேன். அந்த சக்தியை என் மனதார வணங்குகின்றேன். அந்த மகா சக்தியை இறைவன் என்று நான் அழைக்கின்றேன்.
என் இறைவனே, நீயே என்னைப் படைத்தாய். நான் ஒரு பொருளாகக்கூட இல்லாமல் இருந்த நிலையிலிருந்து நீதான் என்னை உருவாக்கினாய். தாயின் கருவறையில் என்னை வளர்த்தாய். எனக்கு பார்வை கொடுத்து, செவிப்புலன் கொடுத்து, சிந்தனை கொடுத்து, இந்த உலகத்தில் நீ தான் என்னை வாழ வைக்கின்றாய். நான் வாழவில்லை. உன்னால் வாழ்விக்கப்படுகின்றேன். என் வாழ்வின் மீது உன்னையே முழுமையாக நான் பொறுப்பேற்படுத்துகின்றேன்.
இறைவனே, உன்னுடைய கருணையால் என்னுடைய தவறுகளையும் பாவங்களையும் மன்னிப்பாயாக. உன்னைத்தவிர மன்னிப்பவன் இல்லை.
சுகமான ஒரு வாழ்வை எனக்கு வழங்குவாயாக. உடல் ஆரோக்கியமும், மன வலிமையும் குன்றி இருக்கும் இந்த சூழலில் என்னை தேற்றுபவன் உன்னைத் தவிர யாருமில்லை. என்னை நீ அரவணைத்துக் கொள்வாயாக. உன்னிடமே நான் சிரம் தாழ்ந்து பணிகின்றேன். வணங்குவதற்கு தகுதியுடையவன் நீ ஒருவன் மட்டுமே.
நீ என்றென்றும் ஜீவித்திருப்பவன். என்றென்றும் நிலைத்திருப்பவன். என் ஆன்மா உன்னை அறியும். ஆனால் என் அறிவும் அறியாமையும் உன்னை எனக்கு மறைத்து விட்டன. இறைவனே, எனது அறிவின் தீமைகளை என்னை விட்டும் விலக்கி என்னை தூய்மைப்படுத்துவாயாக.
இந்த வாழ்வின் நோக்கம் உன்னை உணர்ந்து கொள்வதும் அறிந்து கொள்வதும் தானே. அதை மறந்து இந்த உலக வாழ்வின் மயக்கங்களில் சுற்றித் திரிந்த நாட்கள் எத்தனையோ. இன்று உன்னை நோக்கித் திரும்பக்கூடிய ஒரு சந்தர்ப்பமாக இந்த பலகீனத்தை, இந்த ஒரு நோயை, இந்த ஒரு கடினமான சூழ்நிலையை நீயே எனக்கு அளித்துள்ளாய். நீ மனிதர்களுக்கு நன்மையை தவிர வழங்குவதில்லை. பெரும் கருணையாளனே, மன்னிப்பவனே, இந்த இரவுப் பொழுதில் உன்னிடம் மனதார மன்னிப்பை வேண்டுவதில் நான் திருப்தியடைகின்றேன்.
நான் அறியாமை எனும் பயத்தில் சிக்கியுள்ளேன். எனது மன இருளை நீக்கி, உனது அருள் ஞானங்களை எனக்கு வழங்குவாயாக. உன்னை நோக்கி என்னை திருப்பிக்கொள்வாயாக. உன்னிடம் அடைக்கலம் புகுவதே எனக்கு பரிபூரண நிம்மதி.
எந்த மனிதனும் எனக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது. அனைத்து நன்மைகளும் எனக்காக உன்புறமிருந்தே உள்ளது. உன்னிடம் நான் எப்போதுமே தேவையுள்ளவனாகவே இருக்கின்றேன்.
என்னை நேர்வழிபடுத்துவதற்காக நோய்களையும் துன்பங்களையும் கொடுப்பதும் நீ, அவற்றை குணமாக்கித் தருவதும் நீயே. உன்னை தவிர என்னை குணமாக்குபவன் இல்லை. நீயே மருத்துவர்களுக்கெல்லாம் மருத்துவன். என் இறைவனே, என்னுடைய அனைத்து நோய்களையும் நீக்கி எனக்கு முழுமையான ஆரோக்கியத்தையும் சுகத்தையும் தருவாயாக.
நீ என்னை எப்படி படைத்தாயோ, அப்படியே உன்னிடம் திரும்ப விழைகின்றேன். எனது உடல், மன அழுக்குகளை நீக்கி என்னை தூய்மைப்படுத்துவாயாக.. இந்த உலக வாழ்க்கையை எனக்கு நன்மையாகவும் வெற்றியாகவும் ஆக்கித் தருவாயாக.
இந்த இரவில் உனது அருளைக் கொண்டு என்னை புதுப்பிப்பாயாக. வாழ்வியல் ஞானங்களையும், உன்னைப் பற்றிய புரிதல்களையும் எனக்கு அதிகமாக்குவாயாக..
எனது அனைத்து எண்ணங்களிலும், பேச்சுக்களிலும், செயல்களிலும் எனக்கு வழிகாட்டுவாயாக. அனைத்தையும் எனக்கு நன்மையாக்கித் தருவாயாக.
மரணம். . . ஒரு மாபெரும் சத்தியம். .அது வரக்கூடிய நேரத்தை உன்னை தவிர அறிந்தவன் யார். உன் அனுமதியைக் கொண்டு வரக்கூடிய அந்த மரணத்தை தடுக்க சக்தி பெற்றவன் யார். . . இறைவனே, எனது மரண பயத்தை நீக்குவாயாக. மரணம் பற்றிய ஞானத்தை எனக்கு அளிப்பாயாக. மிக மிக சுகமான முறையில் என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக.. நான் உன்னைச் சார்ந்தவன். மறுமையில் எனக்கு மன்னிப்பையும், சுகமான வாழ்வையும் அளிப்பாயாக. உன்னைத்தவிர எனக்கு கதி இல்லை. நீயே என் இறைவன். உன்னையே நான் வணங்குகின்றேன். உனக்கு நிகரானவன் யாருமில்லை. உன்னுடைய பெயரைச் சொல்லி நான் உறங்குகின்றேன்.
என் இறைவனே!