Search
  • Arun CJ - CJ Holistic Health

மன்னித்தல் எனும் இறைகுணம்

இறைவனுக்காக அனைவரையும் மன்னித்து விடுங்கள்



எல்லாப் புகழும் இறைவனுக்கே!


நம் மனதில் எந்தவொரு மனிதர் மீதும் வெறுப்பும், அதிருப்தியும், சமாதானமின்மையும் இருக்க வேண்டாம். இறைவனுக்காக அவர்களை மன்னித்து விடுங்கள்.


உங்கள் வாழ்வின் பல தருணங்களில், இறைவன் உங்கள் தவறுகளை மன்னித்து, இன்று உங்களை சுகமாக வாழ வைத்துக்கொண்டிருப்பதற்கு இறைவனுக்கு நீங்கள் செலுத்தும் நன்றியாக மற்றவர்களை நீங்கள் மன்னித்து விடுங்கள்.


உங்களை காயப்படுத்தியவர்களின் கணக்குகளை இறைவன் பார்த்துக்கொள்ளட்டும். உங்களை விட அவன் நன்கறிந்தவன்.

இன்னும், உங்களை காயப்படுத்தியவர்களையும் இறைவன் மன்னித்து நேர்வழியில் செலுத்த வேண்டும் என்பதை உங்கள் பிரார்த்தனையாக மனதில் கொள்ளுங்கள். இது மிக மேன்மையான ஒரு மனித குணமாகும்.


இது போன்ற நற்குணங்களை உங்களிலிருந்து வெளிப்படுத்தவே இறைவன் பல கடின சூழல்களையும் வாய்ப்புகளையும் தருகின்றான். எனவே அதில் தவறி விடாதீர்கள். உங்கள் இறைவனுக்காக உங்களை காயப்படுத்திய அனைவரையும் மன்னித்து விடுங்கள். இறைவன் அதிகமதிகம் உங்களை மன்னிப்பான். உங்கள் சந்ததிகளை மன்னிப்பான். உங்களுக்கான, உங்கள் சந்ததிகளுக்கான, சுக வாழ்விற்கான சூழல்களை அவன் அமைத்துத்தருவான்.


மனிதர்களின் கெட்ட குணங்கள் குறித்தும், நடத்தைகள் குறித்தும் எரிச்சல் கொள்ளாதீர்கள். மனிதர்கள் அனைவரும் தவறுகள் செய்யும் இயல்பைக் கொண்டவர்களாகவே படைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இறைவன் பக்கம் திரும்பிக்கொள்ள வேண்டும். நேர்வழியை அடைந்து கொள்ள வேண்டும். அதற்கான வாய்ப்புகளையும், சூழல்களையும் கொண்டதாகவே மனித வாழ்க்கை பின்னப்பட்டுள்ளது. அந்தப் பின்னலில் நீங்களும் ஏதோ வகையில் தொடர்பு கொண்டிருப்பீர்கள். அத்தொடர்பு இல்லாமல் அவர்களால் உங்களை காயப்படுத்தவோ, மகிழ்ந்ச்சிப்படுத்தவோ முடியாது. இத்தொடர்பு முடிச்சுக்களையெல்லாம் நாம் அறிய மாட்டோம். ஆனால் நம் இறைவன் நன்கறிந்தவன். அவனிடம் அதனை விட்டுவிடுங்கள்.


பொறுமையையும் தெளிவையும் அவனிடம் வேண்டியவர்களாக இருங்கள். அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள். உங்களுக்காக இறைவன் சூழல்களை மாற்றுவான். உணர்வுகள் மாறும். நிகழ்வுகள் மாறும். அந்நிகழ்வுகள் உலக சமாதானத்திற்கான அத்தாட்சிகளாகக் கூட அமையும். நம்மைத் தொடக்கமாகக் கொண்டு இறை அத்தாட்சிகள் நிறைவேறுவதென்பது எவ்வளவு பெரிய பாக்கியம். நம்மை பாக்கியவான்களாக மாற்ற இறைவன் விரும்புகின்றான். எனவே அனைவரையும் இறைவனுக்காக மன்னித்து விடுங்கள்.


அவர்களை நான் எப்படி மன்னிப்பது, அவர்கள் அப்படி செய்துவிட்டார்கள், இப்படி செய்துவிட்டார்கள், அவர்களால் எவ்வளவு இழப்பு, எவ்வளவு அவமானம் என்று உலக அடிப்படையிலான லாப நஷ்டக் கணக்குகளை போட்டுக்கொண்டிருக்க வேண்டாம். உண்மையான லாபமும், உயர்வும் இறைவன் புறமிருந்து மட்டுமே நமக்கு இருக்கின்றது என்பதை எப்போதும் நாம் நினைவில் கொண்டிருப்போம். அகில உலகங்களையெல்லாம் படைத்துப் பராமரிக்கும் அந்த ஏகப்பெரும் பரம்பொருளின் திருப்தியை, அவனின் புன்னகையை பெறுவதை விட வேறு என்ன லாபம் இருந்துவிட முடியும். அப்படி இருக்கிறதென்று நம்மில் யாராவது நினைத்தால், அது அறியாமையின் உச்சமாகும். அறியாமை இருளில் சிக்கியிருப்பதிலிருந்தும் இறைவன் நம்மை பாதுகாக்கட்டும். அவன் புறமிருந்துள்ள ஞானம் எனும் ஒளியைக் கொண்டு அவன் நமக்கு உதவி செய்யட்டும்.


ஒருவரை மன்னிக்கும் குணம் என்பது அவரின் இதயத்தின் ஒரு அழகிய ஆபரணமாகும். அதனை எடுத்து அணிந்து கொள்ளுங்கள். உங்களை அழகு பார்க்க உங்கள் இறைவன் விரும்புகிறான்.


பெருமை என்பது ஒரு இதயத்தின் அழுக்காகும். சில மனித இதயங்களுக்கு அந்த அழுக்கு அழகாகக் தெரிகின்றது. மன்னிப்பு இழுக்காகத் தெரிகின்றது. பெருமை கொண்ட குருட்டு இதயங்களுக்கு இறைவனின் ஒளி மிக்க பாதை தெரியாது. பெருமை கொண்ட மனம் மன்னிப்பதை விரும்பாது. மற்றவர்களை மன்னிக்காத மனம் இறைவனின் உறைவிடமாக இருக்க முடியாது.


நம் மனதின் பெருமைகளை நீக்கிக்கொள்வோம். இன்னும் பகை, வெறுப்பு, கோபம் போன்ற பாரங்கள் நீங்கி நம் மனம் லேசாகட்டும். காற்றினும் அது லேசாகட்டும். பாரமான பொருட்கள் கீழே தானே தங்கும். நாம் இந்த பூமியில் தங்க வேண்டியவர்களல்ல. நமக்கான நித்திய வாழ்வு உயரங்களில் இருக்கின்றது. எனவே நாம் மேலெழுவோம். இறைவனுடைய அழைப்பு இருக்கின்றது. அது தான் மற்றவர்களை மன்னிக்கும் வாய்ப்பு. இறைவனுக்கான அனைவரையும் மன்னித்து விடுவோம்.


மனிதர்களை மன்னிப்பதென்பது அவர்களுக்கு இறங்கிப்போவதல்ல. இறைவனுக்குப் பணிந்து விடுவதாகும். தனக்காகப் பணிந்தவர்களை இறைவன் பாதுகாப்பான், உயர்த்துவான். அந்த உயரம் சுகத்தின் சிகரமாய் இருக்கும். இறைவனுடைய பெயரைக்கொண்டு உங்கள் இதயங்கள் அமைதி பெறட்டும். இறைவன் போதுமானவன்.


Arun CJ

Consultant for Holistic Wellness

(Acupuncture, Yoga and Naturopathy)








352 views