top of page
Search
  • Arun CJ - CJ Holistic Health

புனித தீட்சை பெற்றுக் கொள்ளுங்கள்!


எல்லாப் புகழும் இறைவனுக்கே!


இறைவனிடம் நாம் பிரார்த்தனைகள் செய்கின்றோம். நம்முடைய பிரார்த்தனைகள் இந்த உலக வாழ்வின் சுகங்களை விரும்பியதாகவே பெரும்பாலும் அமைகின்றன. அதில் தவறொன்றுமில்லை. இந்த உலக வாழ்வின் நன்மையான சுகங்களை விரும்புவதும், அதனை இறைவனிடம் வேண்டுவதும், அதாவது நம்முடைய தேவைகளை நிறைவேற்றித்தருபவன் இறைவன் தான் என்பதை மனதார உணர்ந்து அவனிடம் அவைகளை வேண்டுவது நிச்சயமாக நன்மையானதே. பொதுவாக பிரார்த்தனை என்பது நமக்கும் இறைவனுக்குமான ஒரு அழகிய தொடர்பு. அந்த தொடர்பு நிச்சயமாக தேவையானது. இன்னும் நமக்கு அது பாதுகாப்பானதும் கூட.


நாம் இறைவனிடம் இது வேண்டும், அது வேண்டும் என்று நமது கோரிக்கைகளை வைத்து பிரார்த்தனைகள் செய்வதை விட, இறைவன் நமக்கு அளித்திருக்கும் நன்மைகளுக்கு, அவன் நமக்குக் கொடுத்திருக்கக்கூடிய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவது என்பது, பிரார்த்தனைகள் செய்வதைக்காட்டிலும், அதாவது அடுத்தடுத்து வேண்டுவதைக் காட்டிலும் இன்னும் ஒரு செம்மையான தன்மையில் இறைவனுடனான நமது தொடர்பை அமைக்கும்.


மேலும் அறிந்தும், நம்முடைய அறியாமையிலும், மன இச்சைகளில் உழன்றும், உணர்ச்சிகள் வசம் சிக்கியும் நாம் செய்த தவறுகளுக்காக இறைவனிடம் உணர்வாக மன்னிப்பை வேண்டுவதும், பிரார்த்தனைகள் செய்வதை விட இன்னும் அழகான தன்மையில் இறைவனுடனான நமது தொடர்பை அமைக்கும் என்பது எனது சிந்தனையாக இருக்கின்றது. அதாவது நமது தேவைகளை நிறைவேற்றித்தர வேண்டி இறைவனிடம் பிரார்த்தனைகள் செய்வதைக்காட்டிலும், இறைவனுக்கு நன்றி செலுத்துவதும், இறைவனிடம் மன்னிப்பை வேண்டுவதும் நாம் முதன்மையாக செய்ய வேண்டியதாக இருக்கின்றது.


இறைவன் மனிதர்களுக்கு நன்மைகளை மட்டுமே எப்போதும் அருளிக்கொண்டிருக்கின்றான். அவன் புறத்திலிருந்து நமக்கு நன்மையான வாழ்க்கை வசதிகள் வழங்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. நாம் கேட்காமலே எத்தனையோ வாழ்கை வசதிகளை நமக்கு இறைவன் வழங்கியிருக்கின்றான்.

நம் மனதில் ஒரு நன்மையான விருப்பம் ஏற்படுகின்றது என்றாலே, அது இறைவன் நம் மனதில் இறக்கி வைத்தது தான். அதை நாமே உருவாகிக் கொண்டது போல நாம் இறைவனிடமே திரும்ப கேட்கின்றோம். நாம் இறைவனுக்கு அறிவிக்கின்றோம். எனக்கு இப்படியான ஒரு விருப்பம் வந்திருக்கின்றது. அதைப்பற்றி உனக்கு தெரியாது. எனவே நான் அதனை உனக்கு அறிவிக்கின்றேன் என்று இறைவனிடம் நமது தேவைகளை அறிவித்து, அவைகளை நிறைவேற்றித் தர வேண்டுகின்றோம். நிறைவேற்ற வல்லவன் அவன் தான் என்று எண்ணி நாம் கேட்கின்றோமே, அதற்கான அந்த அறியாமையை, இறைவன் மன்னிக்கின்றான்.


இறைவன் நமது மனதில் இறக்கி வைத்த அந்த நன்மையான விருப்பங்களை கவனித்து, ஏற்றுக் கொண்டோம் இறைவனே என்று சொல்லுவதும், அந்த நன்மையான விருப்பத்தை இறக்கி வைத்ததற்கு நன்றி உணர்வை வெளிப்படுத்துவதும், இன்னும் அந்த நன்மையான விருப்பங்களை இறைவன் நிறைவேற்றித் தரும்வரை, அந்த விருப்பங்களைப் பாதுகாத்து, அதாவது சந்தேகங்கள், பயம், அவசரம் போன்றவைகளைக் கொண்டு, உலக அறிவின் கணக்குகளைக் கொண்டு, அந்த விருப்பத்தின் தூய்மையை கெடுத்து விடாமல், அந்த விருப்பங்களைப் பாதுகாத்து, பொறுமை கொண்டு, அவன் வழிகாட்டுதல்களின் படி செயல்கள் புரிந்து கொண்டிருப்பதுமே உண்மையான பிரார்த்தனையாகும். பிரார்த்தனை செய்வதாக இருந்தால் நாம் இப்படியான பிரார்த்தனையையே மேற்கொள்ள வேண்டும்.

நாம் தானே செயல்கள் செய்கின்றோம் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். இறைவன் தான் அவன் புறத்திலிருந்து ஆற்றல்களைக் கொடுத்து, வழிகாட்டல்களைக் கொடுத்து நம்மை செயல்களை செய்ய வைக்கின்றான். செயல்களை செய்ய வலிமை கொடுப்பதும், ஞானம் கொடுப்பதும், சூழல்களை சாதகமாக ஆக்கி வைப்பதும் இறையாற்றல் தான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எனவே நம் வாழ்வின் அத்தனை நன்மைகளும் இறைவன் புறத்திலிந்து நமக்கு வழங்கப்படுவதேயாகும். அவன் புறத்திலிருந்து மனிதர்களுக்கு எந்தத் தீங்கும் இறக்கப்படுவது கிடையாது. நம் வாழ்வில் நாம் அடைந்திருக்கும் தீமைகள் அனைத்தும் முழுக்க முழுக்க, நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்டது மட்டுமேயாகும். நம்முடைய அறிவைக் கொண்டும், நம்முடைய அறியாமையைக் கொண்டும், அவசரத்தைக் கொண்டும், நம்முடைய பெருமையைக் கொண்டும், கவனமின்மையைக் கொண்டும், மன இச்சைகளைக் கொண்டும், கவலை, துக்கம், கோபம், பயம் போன்ற கெட்ட உணர்ச்சிகளைக் கொண்டும், நாம் தான் இறைவன் புறத்திலிருந்து நமக்கு அருளப்படும் நன்மைகளை தவறவிட்டுவிடுகின்றோம். நமக்கு ஏற்பட்டிருக்கும் சுகவீனங்களில் நம்முடைய பங்கு தான் முழுமையாக இருக்கின்றது. அதில் இறைவனை குற்றம் சேர்ப்பது பெரும் தவறு. அதனை செய்ய வேண்டும் என்று நாம் நினைக்கக்கூடக் கூடாது.


நன்மைகள் அனைத்தும் இறைவன் புறமிருந்து. தீமைகள் அனைத்தும் நமக்கு நாமே செய்து கொண்ட அநியாயங்களே. இது ஒரு உறுதியான சத்தியம். இதனை நாம் அனைவரும் எந்த சந்தேகமும் இல்லாமல், எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். எப்போதெல்லாம் ஒரு சத்தியத்தை நாம் மனதார ஏற்றுக் கொள்கின்றோமே, அப்போது முதலாகவே நாம் இறைவனால் மன்னிக்கட்டு சுகமான வாழ்வின் பாதைகளில் பயணிக்கத் தொடங்க முடியும்.


இறைவன் நமக்கு அளித்த நன்மைகளுக்கு நாம் நன்றி செலுத்தத் தவறிவிடுகின்றோம். நாம் நன்றி செலுத்தத் தவறிவிடும் போதே, அந்த நன்மைகளையும் நாம் தவறவிடுகின்றோம் என்பது தான் அர்த்தமாகும். அந்த நன்மைகளை நாமே தான் நமது அறிவைக் கொண்டும் திறமையைக் கொண்டும் அடைந்து கொண்டோம் என்றும் நினைத்துக் கொள்கின்றோம், பெருமைப்பட்டுக் கொள்கின்றோம். எப்போது நாம் அடைந்த நன்மைகளுக்கு இறைவனுக்கு நன்றி செலுத்தத் தவறுகிறோமோ, அப்போது நமக்குள் பெருமை நுழைந்து விடுகின்றது. நன்றி செலுத்தத் தவறுவது பெருமை எனும் கெட்ட உணர்ச்சி நமக்குள் நுழைய கதவுகளைத் திறந்து விட்டுவிடுகின்றது.


இறைவனுக்கு நன்றி செலுத்தத் தவறுவதும், மனிதர்களாகிய நாம் நம் மீது பெருமைப்பட்டுக் கொள்வதென்பதும் ஒரு மாபெரும் சத்திய முரண்பாடு. சத்தியத்திற்கு மாறான செயல். இந்த பிரபஞ்சத்தின் அனைத்துத் தன்மைகளும் உயிர்க்கூறுகளும், சூழல்களும் சத்தியத்தைக் கொண்டே இயங்கிக் கொண்டிருக்கின்றன. நாம் நம் மீது பெருமை கொள்ளும் போது, அதாவது சத்தியத்திற்கு முரண்பட்டு நிற்கும் போது, பிரபஞ்சத்தின் அனைத்து அம்சங்களும் நமக்கு எதிராக மாறுகின்றன என்பதை நாம் அஞ்சிக் கொள்வோம்.

இறைவன் நமக்களித்த நன்மைகள் அனைத்தையும் நமது பெருமையால் தான் நாம் கெடுத்துக் கொண்டோம். பெருமை எங்கு இருக்கின்றதோ அங்கே இறைவனின் நன்மைகள் இல்லை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே எல்லாப் பெருமைகளும் இறைவனுக்கு மட்டுமே என்பதை உணர்வாக தொடர்ந்து உச்சரித்துக் கொள்வோம். நம் மீது படிந்திருக்கும் அசத்தியத்தின் அழுக்குகளெல்லாம், கரைகளெல்லாம் அந்த புனித வார்த்தையைக் கொண்டு சுத்தம் செய்யப்படட்டும். எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பது அந்த வார்த்தை. நம் வாழ்வின் மீட்சிக்கான வார்த்தை இது.


நமக்கு நன்மைகள் நடக்கும் போது, நாம் இறைவனை நினைக்க வேண்டும். அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். அது தான் நியாயம். ஆனால் நாம் அப்போது, அப்படியே மாற்றி செய்கின்றோம். இறைவனை மறந்து விட்டு, நம் மீது பெருமை கொண்டு கொள்கின்றோம். நமக்கு தீமைகள் நடக்கும் போது, நாம் செய்த தவறுகளைத் தான் நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். ஆனால் அதனை செய்யாமல், இறைவன் பக்கம் திரும்பி, இறைவனே ஏன் என்னை இப்படி துன்பத்துக்கு ஆளாக்குகிறாய் என்று கேட்கின்றோம். அப்போதும் அப்படியே மாற்றி செய்கின்றோம்.


இதுவரை அது அறியாமையாக இருக்கலாம். ஆனால் இப்போது நம்மிடையே சத்திய வேதம் நினைவூட்டப்பட்டு விட்டது. இனிமேலும் அது அறியாமைக் கணக்கில் சேராது. எனவே உணர்வு பெற்று, உறுதி கொண்டு, இறைவழியில் நிலைத்திருப்போம்.


இந்த உலகில் ஒரு சக்தி மிக்க ஆன்மிக செயல் முறை ஒன்று இருக்கின்றதென்றால், அது இறைவனுக்கு நன்றி செலுத்துவதும், அவனிடம் மனதார மன்னிப்பை வேண்டுவதும் மட்டுமே. இவ்விரண்டையும் விடுத்து, ஆன்மிகம் என்ற பெயரில் இன்றைக்கு நாம் செய்து கொண்டிருக்கும் வீணான காரியங்களிலிருந்தும், அர்த்தமற்ற சடங்குகளிலிருந்தும் நாம் விலக வேண்டும். இந்த உணர்வு பெறுதல் தான் தீட்சையாகும். இறைவனை நோக்கிய அழகிய பயணத்திற்கான உணர்வின் தொடக்கம் தான் தீட்சை. அந்த புனித தீட்சை நமக்கு இறைவன் புறத்திலிருந்து நினைவூட்டலாக, அழகிய உணர்வாக இப்போது நமக்கு வழங்கப்பட்டுவிட்டது.


பெருமை கொண்ட மனிதர்களிடம், உணர்ச்சிகள் ஊட்டப்பட்ட நிலைகளில், தீட்சை பெறுவதற்காக மனிதக் கூட்டங்கள் சில, வரிசை கட்டி நிற்கின்றன. அந்தப் பெரும் வழிகேட்டிலிருந்து இறைவன் இன்றைக்கு நம்மை உறுதியாகப் பாதுகாத்திருக்கின்றான். சகல பெருமைகளுக்கும் தகுதியான நம் இறைவன், நம் மீது கருணை கொண்டு, புனித தீட்சையை, அதாவது அவனை நோக்கிக் திரும்பிக் கொள்வதற்கான அந்தப்பேரழைப்பை நமது இதயங்களில் இப்போது உணர்வாக இறக்கி வைத்து விட்டான். உணர்வு தான் இறை மொழி. அந்த உணர்வு, அந்த தீட்சை, உயிரோட்டமாக நமது உள்ளங்களில் இருந்து கொண்டிருப்பதை நாம் உணர்ந்து கொள்வோம். நமக்கு வழங்கப்பட்ட தீட்சையை நாம் உணர்ந்து கொள்வோம். ஏற்றுக் கொள்வோம்.


நாம் மன்னிக்கப்பட்டவர்கள். பாக்கியசாலிகள். சொர்க்க வாழ்விற்காக அகிலங்களின் அதிபதியால் அழைக்கப்பட்டவர்கள். ஏற்றுக் கொண்டோம் இறைவனே என்பது இப்போது நமது மனதில் இருக்க வேண்டிய உணர்வு.


இன்று முதலாக நமது வழிபாடு, நமது உள்ளமெனும் கோவிலில் மட்டுமே நிகழ வேண்டும். உணர்வு மட்டுமே நமது மந்திரமாக இருக்கட்டும். எங்கள் இறைவனே, நீ எங்களுக்கு அளித்த அருட்கொடைகளுக்கு எங்கள் நன்றிகளை நீ ஏற்றுக் கொள்வாயாக. நீ அளித்த நன்மைகளை நாங்கள் அறியாமையைக் கொண்டும், பெருமையைக் கொண்டும், மன இச்சைகளைக் கொண்டும் தவற விட்டோமே, எங்கள் மன்னிப்பை ஏற்று, எங்களைப் பொறுத்தருள்வாயாக. மீண்டும் அந்தத் தவறுகளின் பக்கம் திரும்பிவிடாத வண்ணம் எங்களை பாதுகாப்பாயாக! இன்னுமின்னும் நன்மையான விருப்பங்களை எங்கள் மனங்களில் இறக்குவாயாக! அந்த விருப்பங்களை நாங்கள் பாதுகாத்து வைத்துக் கொள்ளவும் எங்களுக்கு நீ உதவி செய்வாயாக! உன் புறத்திருலிந்து எங்களுக்கு ஆற்றலையும், ஆதரவையும் தருவாயாக! எல்லாப் பெருமைகளும் உன் ஒருவனுக்கே என்ற சத்திய நிலைப்பாட்டில் எங்களை எப்போதும் உறுதி பெற்று வாழ வைப்பாயாக! என்பது பிரார்த்தனை உணர்வுகளாக நமக்குள் இருக்கட்டும். சுகமான வாழ்விற்கான அழைப்பை இன்று முதலாக நம் அனைவருக்கும் இறைவன் வழங்கி, வாக்களிக்கின்றான். ஏற்றுக் கொண்டோம் இறைவனே! எல்லாப் புகழும் உன் ஒருவனுக்கே!

இந்தக் கட்டுரை


Arun CJ

Acupuncture, Yoga and Naturopathy Consultant

அவர்களுடைய உரைகளின் எழுத்து வடிவமாகும்


இந்தக் கட்டுரை உரையின் Youtube Link





52 views
bottom of page