top of page
Search
  • Arun CJ - CJ Holistic Health

'நான்' என்பது உடலா, மனமா, உயிரா?

Arun CJ, [02-Dec-2022 at 8:33:03 PM]:

எல்லாப் புகழும் இறைவனுக்கே!


அரசன் ஒருவனுக்கு மனதின் ஒரு கேள்வி எழுந்தது. நான் என்பது என்ன? எனது உடலா, எனது மனமா, அல்லது எனது உயிரா? என்று.


இந்தக் கேள்விக்கு அவனுக்கு ஒரு தெளிவான, ஞானம் நிறைந்த, ஒரு பதில், ஒரு விளக்கம் தேவையாக இருந்தது. அதனால் அந்த அரசன் ஒரு ஆன்மிக குருவை சந்திக்கச் சென்றான்.


குரு அவரது ஆசிரமத்தில் அரசனை வரவேற்றார். இருவரும் பேச ஆரம்பித்தனர். அப்போது அரசன் அவனது கேள்வியை, அதாவது நான் என்பது எனது உடலா, எனது மனமா, அல்லது எனது உயிரா? எது? என்று குருவிடம் கேட்டான்.



குரு அரசனிடம் கேள்வியின் சாரத்தை உள் வாங்கிக்கொண்டார். பின்னர் அவர் அரசனிடம் கேட்டார்,

அரசே நீங்கள் எதில் இங்கு வந்தீர்கள் என்று.

நான் எனது தேரில் வந்தேன் என்றான் அரசன்.

உங்கள் தேரை நான் பார்க்கலாமா என்றார் குரு.

கண்டிப்பாக பார்க்கலாமே என அரசன் சொல்ல,

இருவரும் நடந்து தேருக்கு அருகில் சென்றார்கள்.


இது தான் எனது தேர் என்று குருவிற்கு காண்பித்தான் அரசன்.

பின்னர் குரு கேட்டார், எனது கண்களுக்கு இரண்டு சக்கரங்கள் தெரிகின்றன, சக்கரத்தின் அச்சுகள் தெரிகின்றன, குதிரைகள் தெரிகின்றன, நீங்கள் அமரக்கூடிய இருக்கை தெரிகின்றது, நிழல் தரும் குடை தெரிகின்றது, உங்கள் நாட்டின் கொடி தெரிகின்றது, இன்னும் பல்வேறு தங்க அலங்காரங்களும் கூட தெரிகின்றன. ஆனால் தேர் எங்கே இருக்கின்றது அரசே என்று வினவினார் குரு.


சற்றே குழம்பியவனாக அரசன் சொன்னான், இவை எல்லாம் சேர்ந்தது தானே தேர் குருவே என்று.


அதே போலத்தான் அரசே, நீங்கள் என்பது உங்கள் உடலும், உங்கள் மனதும், உங்கள் உயிரும் 'சேர்ந்தது' தான். இதில் நான் என்பது இது தான் என்பதை நாம் தனியே குறிப்பிட முடியாது. ஏனெனில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலக வாழ்வைப் பொறுத்தவரை, இந்த மனித வாழ்வைப்பொறுத்தவரை உடல், மனம், உயிர் இந்த மூன்றில் ஒன்றில்லாமல் மற்றொன்று இயங்க முடியாது. ஒன்றில்லாமல் மற்றொன்றை நாம் அர்த்தப்படுத்த முடியாது, ஒன்றில்லாமல் மற்றொன்றை நாம் பயன்படுத்த முடியாது. ஒன்றின் மூலமே மற்றொன்று வெளிப்பட முடியும் என்று சொன்னார் அந்த குரு.


அரசன் மிக கவனமாகக் கேட்டு அதனை ஆமோதித்தான்.


மரணத்திற்குப் பிறகு ஒருவரின் உடல் அழியலாம். ஆனால் அவர் மரணிக்கும் வரை அவரது 'உடல்' என்பது அவரின் 'நான்' என்ற தன்மையின் தவிர்க்க முடியாத அங்கமாக இருந்ததை, நாம் மறுக்க முடியாதே.


மேலும் மரணத்திற்குப் பிறகு ஒருவரின் மனம் என்ன ஆகும், உயிர் என்ன ஆகும் என்பது பற்றிய கருத்துக்களை நாம் பிறர் சொல்லிக் கேட்டிருக்கிறோமே தவிர, அதன் உண்மைத்தன்மைகளை நாம் அனுபவித்ததில்லையே. அனுபவித்த யாரும் நம்மிடம் நேரடியாக சொன்னதில்லையே.


மேலும் மரணத்திற்குப் பிறகு, அந்த நிலையில், நான் என்பதன் நிலைப்பாடு மாறலாம். மாறட்டும். இன்னும் அடுத்தடுத்த நிலைகள் இருப்பின், அவற்றிலும் நான் என்ற நிலைப்பாடு மாறலாம். அது அந்த நிலையில் தான். ஆனால் இப்போது, இந்த மனித வாழ்வில், ஒருவன் உயிரோடு இருக்கும் நிலையில், ஒருவனது நான் என்பது அவனது உடலும், மனமும், உயிரும் இணைந்த ஒரு தன்மையாகவே இருக்கின்றது. இந்த நிலையில் இந்த சத்தியத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதில் முழுமையை நாம் அடைய வேண்டும். இதில் முழுமையை அடையும் போது, அதாவது இவைகளை சரியான தன்மையில் பேணிக்கொள்ளும் போது, இவைகளை சரியான தன்மையில் நாம் பயன்படுத்தும் போது, இவைகளைப்பற்றிய தெளிவுகள் நமக்கு விளங்கும். உயிர் வாழ்வு, மரணம், மரணத்திற்குப் பிறகு என்ற அடுத்தடுத்த நிலைகளில் ஏற்படும் நான் என்ற தன்மையும் நமக்கு நன்மையாகவே தானே அமையும். எனவே குழப்பம் வேண்டாம் அரசே.


முதன்மையாக நல்ல உணவுகளைக் கொண்டு, உங்கள் உடலைப் பேணிக்கொள்ளுங்கள். நல்ல எண்ணங்களைக் கொண்டு உங்கள் மனதைப் பேணிக்கொள்ளுங்கள், இறைச்சிந்தனைகளைக் கொண்டு உங்கள் உயிரை உணர்ந்து கொள்ளுங்கள், இம்மூன்றின் ஒருங்கிணைப்பில் நற்செயல்களைச் செய்து, இறைத்திருப்தியை அடைந்து கொள்ளுங்கள். இறைவன் புறமிருந்து உங்களுக்கு இன்னுமின்னும் மேலான ஞானங்கள் இறக்கப்படும் என்பதை அந்த குரு அரசனுக்குச் சொன்னார். அரசனும் அவரின் பதிலில் சமாதானம் கொண்டான்.


நாமும் அதே தெளிவை அடைந்து கொள்வோம். நான் என்பது உடலுமல்ல, மனமுமல்ல என்ற ஆன்மிக வியாபாரிகளின் குழப்ப மொழிகளைக் கடந்து, யதார்த்தத்தில் நிலைத்திருக்கும் எளிய இறை சத்தியத்தை நாம் அனைவரும் உணர்ந்து கொள்வோம். உடல் நலிவுறும் போது, மனமும் வலிமை குன்றிப்போகும். மனதில் அசுத்தம் ஏற்படும் போது, உடலிலும் நோய்கள் உண்டாகும். உடலும் மனதும் கெட்டுவிடும்போது உயிர் அங்கே உறைய முடியாதே. எனவே உடல் மனம் உயிர் ஆகிய ஒவ்வொன்றையும் அதற்குரிய தர்மத்தில், அதற்குரிய தன்மையில் நாம் பேணிக்கொள்ள வேண்டும்.


அக்குபங்சர் எனும் வாழ்வியல் கலையை, மருத்துவ முறையை அறிந்து கொண்டிருக்கின்ற மனிதன் என்கிற முறையில் என்னால் ஒன்றை மிக உறுதியாக சொல்ல முடியும், உடலையும், மனதையும், உயிரையும், ஒரு ஒருங்கிணைந்த தன்மையில் பேணிக்கொள்வதற்கான முழுமையான ஞானங்கள் அக்குபங்சர் வழிமுறைகளில் உண்டு, நிறைவாகவே உண்டு.


இறைவன் மனிதர்கள் மீது நேசம் கொண்டு இறக்கியருளியிருக்கின்ற ஒரு மகத்துவம் மிக்க வாழ்வியல் ஞானமாக அக்குபங்சர் வழிமுறை இருக்கின்றது. இதனை நாம் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டும். ஏற்கனவே கற்றறிந்தவர்கள் இதனை உங்களால் முடிந்த மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும். நம்முடைய இந்த நல்ல விருப்பம் இறைவனுடைய அருளைக்கொண்டு நிஜமாக மாறட்டும்.


இறைவன் போதுமானவன். எல்லாப் புகழும் இறைவனுக்கே.


Arun CJ உரைகளின் எழுத்து வடிவம்



Video Link - https://www.youtube.com/watch?v=OoOsWtNpVus&t=22s

64 views
bottom of page