Arun CJ - CJ Holistic Health
"உயிர் - மனம் - உடல்" - ஆற்றல் அறிவியலின் புரிதல்கள்
Updated: Aug 3, 2022

எல்லாப் புகழும் இறைவனுக்கே!
உலகத்தில் படைக்கப்பட்டுள்ள அத்தனை உயிர்களுக்குள்ளும், படைப்பாளனின் அம்சம் இருக்கின்றது. அது ஒரு ஆற்றலாக இருக்கின்றது. அதனை நாம் உயிராற்றல் என்று சொல்கின்றோம். உயிராற்றல் என்பது ஒரு பரிசுத்தமான இயக்கும் சக்தி. அனைத்து இயக்கங்களுக்கும் ஆதாரமான சக்தி, உயிராற்றல் எனும் அந்த இயக்கும் சக்தி தான். எங்கெல்லாம் ஒரு இயக்கம், ஒரு அசைவு இருக்கின்றதோ, எங்கெல்லாம் மாற்றம் நிகழ்கின்றதோ அங்கெல்லாம் உயிராற்றலின் பங்களிப்பு இருக்கின்றது என்றே அர்த்தம். நமக்குள் உயிராற்றல் செயல்பட்டுக்கொண்டிருப்பதை நாம் உணர்ந்து கொள்வோம். இந்த உயிராற்றலை ஒரு பிரகாசமான, பரிசுத்தமான ஒளி என்று உருவகப்படுத்திக் கொள்வோம்.
நமக்குள் மனம் என்ற ஒரு தன்மை இருக்கின்றது. நம் மனம் தான் நமது வாழ்வின் அடிப்படையாக இருக்கின்றது. நம் மனதை ஒளி ஊடுருவக்கூடிய ஒரு கண்ணாடித்தட்டு என்று உருவகப்படுத்தி புரிந்து கொள்வோம்.
அடுத்து நமது உடல். நமது உடல் என்பது மிகச்சிறப்பான இயக்கக் கட்டமைப்புகளைக்கொண்டதாக நம் இறைவனால் நமக்கு படைத்தளிக்கப்பட்டிருக்கின்றது.
உயிர் எனும் ஒளி, உயிர் எனும் ஒப்பற்ற இயக்கும் சக்தி நமக்குள் இருப்பதை நாம் உணர்கின்றோம். நமது மனதை நாம் உணர்கின்றோம். நமது உடல், நமது இருப்பிற்கான மிகப்பெரிய அத்தாட்சியாக இருந்து கொண்டிருப்பதையும் நாம் உணர்கின்றோம்.
இங்கே ஒரு நுட்பமான ஆற்றல் இயங்கியல் புரிதலை, அதாவது நமக்குள் ஆற்றல்கள் எவ்விதமான இயங்கும் தன்மைகளில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பதை நாம் விளங்கிக்கொள்வோம்.
நமது உயிரின் ஒளி, நமது மனதின் மூலமாக ஊடுருவி, நமது உடலை அடைகிறது. உயிர் எனும் அந்த இயக்கும் சக்தி, அதன் பரிசுத்தத்தன்மையில் உடலில் முழுமையாகப் பாய்ச்சப்படும் போது, உடல் எனும் இயந்திரம் மிகச்சிறப்பாக தனது இயக்கத்தை செய்து கொள்ள முடியும். ஆனால் மனம் எனும் தளத்தைக் கடந்தே உயிரின் ஒளி உடலை அடைய முடியக்கூடிய தன்மை இருப்பதால், மனதில் இருக்கும் கறைகள், மனதில் நிலவும் அசுத்தங்கள், உடலுக்கான உயிரின் பிரகாசத்தை மழுங்கடிக்கின்றன என்பதை நாம் இங்கே உணர்ந்து கொள்ள வேண்டும்.
அனைவருக்கும் உயிர் இருக்கின்றது. அனைவருக்கும் உடல் இருக்கின்றது. ஆனால் அனைவரும் ஒரே மாதிரியான ஆரோக்கிய நிலை இருக்கின்றோமா? இல்லையே. ஆக, உயிருக்கும் உடலுக்கும் நடுவே ஏதோ ஒன்று இருக்கின்றது, அந்த ஒன்று தான், அந்த ஒன்றின் தன்மைகள் தான் ஒரு மனிதனின் ஆரோக்கிய வாழ்வை, அவனின் சுக மற்றும் சுகவீனங்களை தீர்மானிக்கின்றது. அந்த ஒன்று தான் மனம்.
நம் உயிருக்கும் உடலுக்கும் நடுவே நம் மனம் இருக்கின்றது. மனம் தான் மனிதனின் மையம். மனம் அதனது தூய்மைத்தன்மையில் நிலைத்திருக்கும் போது உடலில் நோய்கள் இருக்காது. ஏனெனில், அது உடலுக்கான உயிரின் பிரகாசத்தை மழுங்கடிக்காது. ஆனால் மனம் கெட்ட உணர்ச்சிகளாலும், கெட்ட எண்ணங்களாலும், இறை நிராகரிப்பிலும் மயங்கி, அசுத்தமடைந்திருக்கும் போது, உடலுக்கான உயிரின் ஒளியும் மங்குகிறது. ஒரு மங்கிய மின்விளக்கு உள்ள ஒரு அறையில் அமர்ந்து பணி செய்வது போல, உடலின் பணிகளை நிறைவேற்றுவதில் ஒரு குறைபாடு உண்டாகின்றது.
உடலில் ஒரு நோய் ஏற்படுகிறது என்றால், அதன் மூல காரணத்தை நாம் உடலில் தேடிக்கொண்டிருக்க வேண்டாம். நம் மனதில் தான் அது இருக்கின்றது. ஒரு மனிதனின் வாழ்வு மேம்பட வேண்டுமெனில், அதற்கான பணிகளும் உடலை விட, மனதில் தான், மனதிற்கு முக்கியத்துவம் கொடுத்துத்தான் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தான் ஆற்றலை அடிப்படையாகக்கொண்ட வாழ்வியல் முறைகளின், மருத்துவ முறைகளின் அடிப்படைக் கோட்பாடு. மனித ஆற்றல் அவனின் மனதில் தான் மையம் கொண்டுள்ளது என்பது தான் நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது.
'மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா, மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா, மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா, மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாகும்' என்பது தான் மேற்சொன்ன புரிதல்களின் இரத்தின சுருக்கம்.
அதாவது மனம் தூய்மையானால் வாழ்க்கை தூய்மையாகும், மனம் தூய்மையானால், மருத்துவமே தேவைப்படாத சுகமான வாழ்வு நமக்கு சாத்தியமாகும்.
மனதை தூய்மைப்படுத்திக் கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்? மனம் தூய்மையாக இல்லை என்பதை முதலில் நாம் உணர வேண்டும். கெட்ட உணர்ச்சிகளும், எண்ணங்களும் நம் மனதில் இருக்கின்றன என்பதை முதலில் நாம் உணர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். கவலை, துக்கம், பயம், கோபம், பெருமை, பொறாமை போன்ற கெட்ட உணர்ச்சிகள் நம் மனதிலிருந்து நீங்க வேண்டும் என்ற விருப்பத்தை நாம் மனதாரக்கொள்ள வேண்டும். நமது மனதின் தூய்மைக்கான இந்த உணர்தலும், விருப்பமுமே பிரார்த்தனையாகும். இந்த பிரார்த்தனையை நமது மனதில் நாம் மேற்கொள்ள வேண்டும்.
நம் வாழ்வு சுகமானதாக இல்லையா? நம் உடல் சுகமாக இல்லையா? ஒரு மருத்துவரை தேடிப்போக வேண்டிய அவசியம் இப்போது நம் வாழ்வில் இருக்கின்றதா? நிச்சயமாக நமது மனம் அதன் தூய்மைத்தன்மையை இழந்திருக்கின்றது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அப்போது நாம் செய்ய வேண்டியது, மனதார ஒரே ஒரு பிரார்த்தனை. "எங்கள் இறைவனே, நல்ல எண்ணங்களைக் கொண்டும், பொறுமையைக் கொண்டும், மன்னிப்பைக் கொண்டும் எங்களுக்கு நீ உதவி செய்வாயாக. உன்னையே, (உன் ஒருவனையே) நாங்கள் முன்னோக்குகின்றோம். உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகின்றோம், எங்களை நீ நேர்வழியில் செலுத்துவாயாக என்ற இந்த வார்த்தைகளை நமது உள்ளங்களில் உணர்வாக உச்சரித்துக்கொள்ள வேண்டும்.
இது நமக்கு நாமே செய்துகொள்ளும் மருத்துவம் என்று பார்க்க வேண்டாம். இது அதனினும் உயர்வானது. இது இறைவனுக்குப் பணிந்து விடுதலாகும். இறைவனுக்கு பணிந்து விடுவதைத்தவிர, அவனிடம் மன்னிப்பை வேண்டி, அவன் அறிவிக்கும் நேர்வழியை விரும்புவதை விட உயர்வான மருத்துவம் இங்கே என்ன இருக்கின்றது? இது மருத்துவமல்ல. இது இறைவழி வாழ்வியல். இவ்வாழ்வியல் நம்பிக்கையாளர்களுக்கு மிகவும் எளிது. எடுத்து வைக்க வேண்டியது ஒரு அடி தான். ஆனால் அவ்வாறு அல்லாதவர்களுக்கு (இறை நம்பிக்கை இல்லாதவர்களுக்கு) இது ஒரு அழைப்பு. ஒரு நினைவூட்டல்.
இறைவழி வாழ்வியல் என்பது சுகத்திற்கான ஞானங்களின் பாதை இது. அறிவின் பாதையும் இருக்கவே செய்கிறது. அது இன்னுமே அலங்காரமாகவே இருக்கின்றது. பெரும் கூட்டம் அங்கே போய்க்கொண்டிருக்கின்றது. இறைவன் தான் நாடியவர்களையே நேர்வழியில் செலுத்துவான். இறைவன் போதுமானவன். எல்லாப்புகழும் இறைவனுக்கே!
Arun CJ
Consultant for Holistic Wellness
(Acupuncture, Yoga and Naturopathy)