Arun CJ - CJ Holistic Health
உணர்வுகளும் உணர்ச்சிகளும்
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
நம்முடைய உணர்ச்சிகளை, நம்முடைய உணர்வுகள் மிகைக்க நாம் வாழ வேண்டும். உணர்ச்சிகள், உணர்வுகள் இரண்டுமே ஒரு துளிர் போல நமது மனதில் எழக்கூடியவைகளே. அவற்றில் எதனை நாம் வளர்த்தெடுக்கின்றோம். எதனைச் சார்ந்து நமது செயல்பாடுகளை அமைத்துக் கொள்கின்றோம் என்பது தான் நமது வாழ்வின் வடிவங்களை, தன்மைகளை தீர்மானிக்கக்கூடியதாக அமைகின்றது.

அவசரமும் கோபமும் உணர்ச்சிகள். பொறுமையும் சகிப்புத்தன்மையும் உணர்வுகள். பெருமையும் பொறாமையும் உணர்ச்சிகள், பணிதலும், நன்றி செலுத்துதலும் உணர்வுகள், கவலையும் பயமும் உணர்ச்சிகள், சமாதானமும், நம்பிக்கையும் உணர்வுகள். உணர்ச்சித் தொகுப்புகளும், உணர்வுத் தொகுப்புகளும் நம் மனதில் இருக்கின்றன. இவற்றில் எதனை வேண்டுமானலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளக் கூடிய சுதந்திரம் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது. மேலும் அவற்றில் எதனைத் தேர்ந்தெடுத்தால் நன்மை என்ற வழிகாட்டலும் நம்முடைய உள்ளத்தில் நம்முடைய இறைவனால் நமக்கு வழங்கப்படுகிறது. இறை வழிகாட்டுதல்கள் எப்போதுமே உணர்வுகளின் பக்கம் செல்லவே நம்மை பரிந்துரைக்கின்றது. எனவே எப்போதும் நாம் உணர்ச்சிகளை மிகைத்து உணர்வுகளில் மட்டுமே நிலைக்க வேண்டும். அதுவே சுகத்திற்கும் சமாதானத்திற்குமான வாழ்க்கை வழிமுறை.
இவ்வுலக வாழ்வில் நாம் செய்யக்கூடிய செயல்கள் அனைத்தையும் உணர்ச்சிகளின் அடிப்படையில் செய்பவை, உணர்வுகளின் அடிப்படையில் செய்பவை என இரண்டாகப் பிரிக்கலாம். உணர்ச்சி ஒரு செயலைச் செய்ய நம்மைத் தூண்டி, அதனை நாம் செய்வோமானால், அதன் விளைவுகள் துன்பங்களாகவும், நோய்களாகவும், சோதனைகளாகவுமே அமையும். உணர்வுகளின் அடிப்படையில் நாம் செய்யக்கூடிய செயல்கள் மட்டுமே இறைப்பொருத்தத்தில் அமைந்து, நன்மையான பக்கியங்களும், ஞானங்களும், சமாதானமும் நமக்கான விளைவுகளாய் அமையும்.
இறைப்பொருத்தத்தையும், பெரும் ஞானங்களையும், நிலைத்த சமாதானத்தையும் அடைவதே உலக வாழ்வின் அழகான வெற்றியாகும். ஒவ்வொரு மனித ஆன்மாவும் அடைய விரும்புவது இந்த அழகான வெற்றியைத் தான். இந்த அழகான வெற்றியத் தவிர மற்ற அனைத்தும் அற்பங்களும், அழியக்கூடியவைகளுமேயாகும். இந்த அழகான வெற்றியை அடைய விரும்பும் ஒவ்வொருவரும் அவர்களின் உணர்ச்சிகளைக் கீழாக்கி, உணர்வுகளில் மிகைத்து, நிலைத்திருக்க வேண்டும்.
நான் உணர்ச்சிகளில் ஆட்பட்டு சிக்கியிருக்கின்றேன். உணர்வுகளின் பக்கம் நான் மீள விரும்புகின்றேன் என்று இப்போது உங்கள் மனதில் ஒரு எண்ணம் எழுகின்றதா. இது வெறும் எண்ணமல்ல. இது ஒரு விருப்ப உணர்வாகும். மறைவான, நன்மையான சுகத்தை நாம் விரும்பும் போதெல்லாம் நாம் விருப்ப உணர்வை மேற்கொண்டிருக்கின்றோம் என்று அர்த்தம். விருப்ப உணர்வு என்பது உணர்வுகளில் உன்னதமானதாகும். அதுவும் உணர்ச்சிகளிலிருந்து மீண்டு, உணர்வுகளின் பக்கம் திரும்ப விரும்புகின்றேன் என்ற விருப்ப உணர்வை மேற்கொள்வது இன்னுமே சிறப்பானதாகும்.
நமது மனதில் ஏற்படக்கூடிய விருப்ப உணர்வுகள் என்பது இறைவன் புறத்திலிருந்து நமக்குக் கொடுக்கப்படும் வாக்காகும். அதாவது நமது விருப்ப உணர்வுகள் என்பது, இது உனக்கு வேண்டுமா, நான் தருகின்றேன் என்று இறைவன் நம்மிடம் நேரடியாக பேசுவதைப் போன்றதாகும் .
இது உனக்கு வேண்டுமா என்று கேட்பவன் யார், படைப்பாளன், சர்வ வல்லவன், அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றல் உள்ளவன், அகிலங்களின் கருவூலங்களின் அதிபதி, நமது வாழ்வை மேற்பார்வை செய்து, சீராக்கித் தந்து நமக்கு உதவுபவன், நமது வாழ்வின் புதிய அத்தியாயங்களை தொடங்கி வைப்பவன், நம் மீது பேரன்பு கொண்டு மன்னிப்பு எனும் அருளை நம் மீது பொழிபவன் அவன். அவனை நாம் கண்ணியப்படுத்த வேண்டும் தானே. அவனை கண்ணியப்படுத்துவதென்பது, நமது விருப்ப உணர்வுகளை முழுமையான நம்பிக்கையோடு ஏற்றுக் கொள்வதாகும். சந்தேகங்களோ, உலக அறிவோ, காரண காரியக் கணக்குகளோ ஒரு சிறுதும் தீண்டாத தன்மையில் நமது விருப்ப உணர்வுகளை நாம் மேற்கொண்டிருக்க வேண்டும். இது இறைவனுக்கு பிடித்தமான இறை வழிபாடாகும்.
நம் மனதில் இருக்கும் விருப்ப உணர்வுகளுக்கு, ஏற்றுக் கொண்டேன் இறைவனே என்று சொல்லக்கூடிய பதிலே உலகின் உங்களுக்கான சக்தி மிக்க மந்திரமாகும்.
நமக்கு நோய்கள் இருக்கின்றனவா. சுகமாக வேண்டும் என்ற விருப்ப உணர்வு கொள்ளுங்கள். அதில் நிலைத்திருங்கள். அதாவது பொறுமை கொண்டிருங்கள். பொறுமையாக இருக்க முடியவில்லையா. பொறுமை வேண்டும் என்ற விருப்ப உணர்வைக் கொண்டிருங்கள். நமது வாழ்க்கை நிகழ்வுகளை இறைவன் பொறுப்பேற்றுக் கொள்வான்.
ஆனால், கெட்ட சக்திகள் மட்டும் சில மனிதர்கள் மூலமாகவும், சூழ்நிலைகள் மூலமாகவும் தொடர்ச்சியாக நம்மிடம் பேசும். நமது விருப்ப உணர்வுகளை அது சிதைக்க முயலும். அதிலிருந்தும் இறைவன் நம்மைப் பாதுகாக்க வேண்டும் என்ற விருப்ப உணர்வை நாம் மேற்கொள்ள வேண்டும். நமது உணர்ச்சிகள் அனைத்தையும் விருப்ப உணர்வுகளைக் கொண்டு மிகைக்க வேண்டும்.
விருப்ப உணர்வுகளில் முழுமையான நம்பிக்கையும் பொறுமையும் கொண்டு ஒருவர் இருக்கின்றார் என்றால், அவர் இறையாற்றலால் முழுமையாக பாதுகாக்கப்பட்டு, சுகத்தையும் வெற்றியையும் நோக்கி செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றார் என்று தான் அர்த்தம்.
உணர்வுகளுக்கு மேலாக உணர்ச்சிகளை ஆக்கிக் கொண்டதன் விளைவுகளே நமது நோய்கள். நோய் நிலையிலும், நாம் பயம் கொள்வதும், அவநம்பிக்கை கொள்வதும், இன்னும் மனிதர்களை நாடி, அவர்களை தெய்வமாக்கிக் கொண்டு, அவர்களின் வழிமுறைகளுக்கு பணிந்து விடுவதும் உணர்ச்சிகளின் அடிப்படியிலான செயல்களே. நிச்சயமாக அது வேண்டாம். இதனை ஒரு எச்சரிக்கையாகவே நம்பிக்கையாளர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இறைவன் நம்மைப் பாதுகாக்கட்டும். வழிநடத்தட்டும். மன்னிக்கட்டும். அனைத்தையும் சீராக்கித் தரட்டும். எல்லாப் புகழும் இறைவனுக்கே!
Arun CJ
Consultant for Holistic Wellness
(Acupuncture, Yoga and Naturopathy)