top of page
Search
  • Arun CJ - CJ Holistic Health

இதய நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி?

எல்லாப் புகழும் இறைவனுக்கே!


மாரடைப்பு பற்றி இன்றைக்கு நமது சமூகத்தில் அதிகமாக பேசப்படுகின்றது. மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களிலிருந்தும், இன்னும் அனைத்து விதமான சுகவீனங்களிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் மனித சமுதாயம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பிரார்த்தனையை உள்ளச்சத்தோடும் பணிவோடும் உணர்வாக இறைவனிடம் நாம் வைத்துக்கொள்வோம். இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்வதற்கான சில அடிப்படையான அக்குபங்சர் மருத்துவப் புரிதல்களை இப்பதிவில் நாம் விளங்கிக்கொள்வோம்.


இதயம் என்ற உறுப்பிற்கான 'உற்பத்தி சக்தி'யை வழங்குவது கல்லீரல் என்ற உறுப்பாகும். உற்பத்தி சக்தி என்பது ஒரு உறுப்பின் இயக்கத்திற்கான அடிப்படை ஆதார சக்தி என்று புரிந்து கொள்வோம். அக்குபங்சர் படித்திருப்பவர்களுக்கு இது தெரியும். இன்னும் நாம் எளிமையாக புரிந்து கொள்வதானால், இதயம் என்ற உறுப்பிற்கு கல்லீரல் ஒரு தாய் போல இருக்கின்றது என்று புரிந்து கொள்வோம். ஒரு தாய் தனது மகனை எப்படி பேணிப்பாதுகாத்து வளர்ப்பாரோ, அதேபோல நமது இதயத்தை நமது கல்லீரல் பேணிக்கொள்கின்றது, அதனுடைய இயக்கங்களுக்கு உதவி செய்கின்றது, அதற்கு ஆதரவாக இருக்கின்றது என்பதை நாம் அறிந்து கொள்வோம்.


நமது இதயம் நிறைவான சக்தியோடு, ஆரோக்கியமாக இயங்க வேண்டுமெனில், அதற்கு நமது கல்லீரல் முதன்மையாக உதவி செய்ய வேண்டும் என்பது நாம் புரிந்து கொள்ள வேண்டிய முதல் கருத்தது. அவ்வாறு உதவி செய்வதற்கு கல்லீரல் அதனது ஆரோக்கியத்தில் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்பது நாம் புரிந்து கொள்ள வேண்டிய இரண்டாவது புரிதல். அதாவது, இதயத்தின் இயக்கங்களுக்கு கல்லீரல் ஒரு தாய் போல உதவி செய்கின்றது என்று புரிந்து கொண்டோம். அந்தத் தாய் ஆரோக்கியமாக இருந்தால் தானே மகனை நல்ல முறையில் பார்த்துக்கொள்ள முடியும்.

ஆக, நாம் நம்முடைய கல்லீரலின் சக்தியை நல்ல முறையில் பார்த்துக்கொண்டாலே, அது நமது இதயத்திற்கு பாதுகாப்பு தரக்கூடிய ஒரு அம்சமாக இருக்கும், மேலும் இதய நோய்கள் பற்றி நமக்கு எந்தவிதமான அச்சமும் தேவையில்லை என்பதை நாம் இங்கே விளங்கிக்கொள்வோம்.


மாரடைப்பு, நமது ரத்த அழுத்த மேலாண்மையில் ஏற்படக்கூடிய பாதகமான மாறுபாடுகள், இன்னும் இதயம் சார்ந்த எந்தவொரு குறைபாடும் ஒருவருக்கு உருவாகின்றது என்றாலே, அவரின் கல்லீரலின் சக்தி முறையாக பராமரிக்கப்பட்டிருக்கவில்லை என்பதும் ஒரு காரணாமாக இருக்க முடியும்.


எனவே தெளிவாக நாம் புரிந்து கொள்வோம், திடீர் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களிலிருந்து நாம் உறுதியாக பாதுகாக்கப்பட வேண்டுமெனில், நாம் செய்ய வேண்டியது, நமது கல்லீரலின் ஆரோக்கியத்தை நல்ல முறையில் பேணிக்கொள்வதாகும்.


கல்லீரலின் இயக்க சக்தியை சரியான தன்மையில் பேணிக்கொள்ளுவதில், நாம் மிக மிக முதன்மையாக கடைபிடிக்க வேண்டிய வாழ்வியல் அம்சம், நமது இரவுத் தூக்கத்தை முறைப்படுத்திக்கொள்வது மட்டுமே. நமது தூக்கத்தை முறைப்படுத்தாமல், வேறு எந்த செயலை செய்தாலும், வேறு எந்த மருத்துவங்கள் எடுத்துக்கொண்டாலும், அது கல்லீரலின் இயக்க சக்தியை முழுமைப்படுத்துவதில் ஒரு உறுதியான தன்மையில் உதவி செய்யாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


இன்றைக்கு இரவு ஒன்பது, பத்து மணியைக்கடந்தும், இரவு உணவை உண்பதும், தொலைகாட்சி, மொபைல்களில் நேரம் செலவிடுவதென்பதும், இன்னும் பல வேலைகள் செய்வதென்பதும் மிக சாதாரணமான ஒன்றாக மாறியிருக்கின்றது. இந்த ஒரு வாழ்வியல் தவறு தான், மறைவாக, மனிதர்களின் இதய நோய்களுக்கும், இன்னும் பலவிதமான நோய்த்தன்மைகளுக்கும் மூல காரணமாக இருந்து வருகின்றது.

தூக்கத்தின் மதிப்பை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அது உடலளவிலும், மனதளவிலும் நமக்குள் ஏற்படுத்தும் மகத்துவம் மிக்க நன்மைகளை உணர்ந்து கொண்டு, நமது தூக்கத்தை முறையாகப் பேணி வர வேண்டும். இது நமது ஆரோக்கிய வாழ்விற்கான ஒரு சக்தி மிக்க சத்தியமான கருத்து.


முக்கியமாக, 'கல்லீரலுக்கும் நமது இதயத்திற்குமான சக்திப்பரிமாற்றம்' நமது முறையான இரவுத்தூக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தான் அமைகிறது என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டு, இன்று முதலாக நமது இரவுத்தூக்கத்தை நாம் முறைப்படுத்திக்கொள்ளத் தொடங்குவோம். இரவு 9, 9.30 மணிக்கெல்லாம், அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு உறங்கச்செல்லப்பழகுவோம்.


சிலர் சொல்வார்கள், எனக்கு தூக்கம் வரவில்லையே, என்ன செய்வதென்று... நாம் முதலில் தூங்குவதற்கான மனநிலையை, சூழலை அடைந்து கொள்வோம். தூக்கம் என்பது ஒரு மதிப்பு மிக்க இறை அருள். அதற்கான விருப்ப உணர்வோடு நாம் காத்திருக்க வேண்டும். அதனை வரவேற்க, எந்த வேலைகளிலும் நம்மை ஈடுபடுத்திக்கொண்டிராமல் நாம் காத்திருக்க வேண்டும். கண்களை மூடி, சாய்ந்து, அமைதியாக பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். அப்போது தூக்கம் என்ற அருள் இறைவனால் நமக்கு முழுமையாக வழங்கப்படும்.


தூக்கத்தின் மதிப்புகளை உணராமல், விருப்ப உணர்வோடும், நன்றியுணர்வோடும் காத்திருந்து அதனை வரவேற்காமல் இருப்பவர்களுக்கு வருவது மயக்கமேயன்றி தூக்கமில்லை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தூக்கம் என்பது வெறும் இளைப்பாறுதல் மட்டுமல்ல. நமது ஆன்மா இறையாற்றலின் அதி நெருக்கத்தை, படைப்பாளனின் உன்னத தரிசனத்தை பெற்று விட்டுத் திரும்பும் ஒரு புனித நிகழ்வாகும். எனவே நாம் தூக்கத்தை கவனமாகக் கண்ணியப்படுத்த வேண்டும்.

மொத்தத்தில், இதய நோய்களிலிருந்து நாம் பாதுகாக்கப்பட வேண்டுமெனில், நமது கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், முதன்மையாக நாம் செய்ய வேண்டியது, நமது தூக்கத்தை முறையாகப் பேணிக்கொள்ளத் தொடங்குவது.


அடுத்து ஒரு முக்கிய புரிதல். ரசாயன மருந்து மாத்திரைகளை நாம் உட்கொள்வதும், நமது கல்லீரலின் ஆரோக்கியத்தை சீர்குலைக்கும் ஒரு செயலேயாகும் என்பதையும் நாம் புரிந்து கொள்வோம். உயிர்க்கூறுகள் இல்லாத ரசாயனங்களை, நச்சுக்களை, இன்னும் உடலுக்கு ஒவ்வாத உணவுக்கூறுகளின் பாதகங்களை முறித்து, அழித்து வெளியேற்றி 'உடலின் தூய்மைத்தன்மையை' பாதுகாப்பது நமது கல்லீரலின் மிக முக்கியப் பணியாக இருக்கின்றது. எனவே அடிக்கடியும், தொடர்ச்சியாகவும் ரசாயன மருந்துகளை உட்கொள்ளுதலும், ரசாயனக் கலப்புகள் உள்ள உணவுகளை அதிகமாக சாப்பிடுவதும், நமது கல்லீரலின் கழிவு நீக்கப்பணிகளில் அதனை முழுநேரமும் ஈடுபடுத்தியிருக்கும். இதனால் கல்லீரலுக்கான ஓய்வுத்தன்மை பாதிக்கப்படுகிறது மற்றும் கல்லீரலுக்கும் இதயத்திற்குமான தொடர்புத்தன்மைகளும் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றது. இந்தவொரு முக்கிய புரிதலையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.


எனவே நாம் எதற்கெடுத்தாலும் மருந்து மாத்திரைகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக காய்ச்சல், சளி, தலைவலிகளுக்கு மாத்திரைகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காய்ச்சலும், சளியும், தலைவலியும் நமது உடலால் நிகழ்த்தப்படும் நன்மையான கழிவு நீக்கப் பணிகளின் விளைவுகள் என்பதை உணர்ந்து கொண்டு, அதுபோன்ற நேரங்களில் பொறுமையாக இருக்க வேண்டும்.


கழிவுகளை நாம் தானே நமக்குள் ஏற்படுத்திக்கொண்டோம். எனவே நாம் பொறுமையாகத்தான் இருக்க வேண்டும். பொறுமை என்பது, அதுவும் சரியான புரிதலுடனும், நம்பிக்கையுடனும் கூடிய பொறுமை என்பது ஒரு சக்தி மிக்க மருந்து. உலகத்தின் எந்தவொரு நோயையும், துன்பத்தையும் இந்த ஒரு மருந்தைக் கொண்டு, நிச்சயமாக சுகமாக்க முடியும். எனவே நாம் சுகவீனங்களின் போது பொறுமையாக இருக்க வேண்டும்.


தேவைப்பட்டால், இயற்கை மருத்துவ வழிமுறைகளை நாடிக்கொள்ள வேண்டும். அதுவும் மிக முக்கியமாக, நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்த பிரச்சினைகளுக்கு, இன்னும் கொழுப்பு, தைராய்டு போன்ற பிரச்சினைகளுக்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் சாப்பிட வேண்டிய நிலைக்கு உட்படுத்தப்பட்டவர்கள், அக்குபங்சர், சித்த மருத்துவம் உள்ளிட்ட இயற்கை மருத்துவங்களை நாடி, பக்க விளைவுகளில்லாத, நன்மையான நிவாரணங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.


இறுதியாக ஒரு பகிர்தல், எந்தவொரு பெரிய நோய்த்தன்மையும் ஒரு நாளில், ஓரிரவில் நமக்குள் உருவாகிவிடுவதில்லை. புரிதலின்றி, அடிக்கடி, தொடர்ச்சியாக நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகளின் தொகுப்பு தான் பெரிய தொந்தரவுகள் என்பதை உணர்ந்து கொண்டு, இன்று முதலாக ஆரோக்கியத்தின் பாதையில் பயணிக்க ஆரம்பிப்போம். இறைவன் அவன் புறத்திலிருந்து ஆற்றலையும், வழிகாட்டல்களையும் கொண்டு நமக்கு உதவி செய்யட்டும். இறைவன் போதுமானவன்.


இந்தக் கட்டுரை

Arun CJ

Acupuncture, Yoga and Naturopathy Consultant

அவர்களுடைய உரைகளின் எழுத்து வடிவமாகும்


இந்தக் கட்டுரை உரையின் Youtube Link



Arun CJ அவர்களின் மற்ற உரைகளைக் கேட்க, அவரது YouTube Channel ஐ பார்க்கவும்.











68 views
bottom of page